வங்கியில் வேலை வேண்டுமா..?
வேலை வேண்டுமா: வங்கியில் தொழில்நுட்ப அதிகாரி ஆகலாம்
பொதுத்துறை வங்கியான கனரா வங்கியில் தொழில்நுட்ப அதிகாரி (Specialist Officer) பணியிடங்கள் நேரடி நியமன முறையில் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் அனைத்தும் கணினி தொழில்நுட்பம், நிதிச் சேவை, தகவல் மேலாண்மை தொடர்பானவை ஆகும்.
பணி விவரம்
சர்ட்டிஃபைடு எத்திகல் ஹேக்கர்ஸ் அண்டு பினிட்ரேஷன் டெஸ்டர் (Certified Ethical Hackers and Penetration Tester), சைபர் ஃபாரன்சிக் அனலிஸ்ட் (Cyber Forensic Analyst), மேலாளர் (கணக்கு தணிக்கை, நிதி, தகவல் ஆய்வாளர், பொருளாதாரம்), தகவல் தொழில்நுட்பப் பாதுகாப்பு நிர்வாகி, வணிக ஆய்வாளர், தகவல் தொகுப்பு நிபுணர், ஈ.டி.எல். நிபுணர்கள் (Extract. Transform & Load Specialists), டேட்டா மைனிங் நிபுணர், மேலாளர் (பாதுகாப்பு) எனப் பல்வேறு விதமான பணிகளில் 88 காலியிடங்கள் உள்ளன. ஒரு சில பணியிடங்கள் எஸ்.டி. வகுப்பினருக்கான பின்னடைவு காலிப் பணியிடங்களாக (பேக்லாக் வேகன்சி) அறிவிக்கப்பட்டிருக்கின்றன.
கல்வித் தகுதி
பொதுவாக, தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட பணிகளுக்கு அடிப்படை கல்வித் தகுதி பி.இ., பி.டெக். ஆகும். அதோடு குறிப்பிட்ட தொழில்நுட்பப் பிரிவில் பயிற்சி மற்றும் அனுபவம் அவசியம். நிதிச் சேவை தொடர்பான பணிகளுக்கு எம்.பி.ஏ. பட்டம் வேண்டும். மேலாளர் (பொருளாதாரம்) பணிக்கு எம்.ஏ. பொருளாதாரப் பட்டதாரிகள் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள். அனைத்துப் பணிகளுக்கும் அடிப்படை கணினி அறிவு அவசியம்.
வயது வரம்பு
வயது வரம்பு பணியின் தன்மைக்கு ஏற்ப 30, 35, 40 என வெவ்வேறு உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனினும் மத்திய அரசின் இடஒதுக்கீட்டு விதிமுறைகளின்படி, எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி. வகுப்பினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.
தேர்வு முறை
பாதுகாப்பு மேலாளர் பணி நீங்கலாக மற்றப் பணிகளுக்கு எழுத்துத் தேர்வு, குழு விவாதம், நேர்காணல் அடிப்படையில் பணி நியமனம் மேற்கொள்ளப்படும். எழுத்துத் தேர்வில் சம்பந்தப்பட்ட தொழில்நுட்பப் பிரிவில் இருந்து 50 வினாக்கள், பொது ஆங்கிலத்தில் 50 வினாக்கள், வங்கித் துறை தொடர்பாக 50 வினாக்கள் என மொத்தம் 150 வினாக்கள் அப்ஜெக்டிவ் முறையில் இடம்பெறும்.
# மொத்த மதிப்பெண் 200.
# 2 மணி நேரத்தில் விடையளிக்க வேண்டும்.
# தவறான பதில்களுக்கு மதிப்பெண் குறைக்கப்படும்.
# ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசி நாள் : ஏப்ரல் 5
எழுத்துத்தேர்வு ஆன்லைனில் நடத்தப்படும். தமிழகத்தில் சென்னை, கோவை உள்பட நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் ஆன்லைன் வழியில் எழுத்துத் தேர்வு நடைபெறும். மேற்கண்ட பணிகளுக்கு கனரா வங்கியின் இணையதளத்தின் மூலம் (www.canarabank.com) விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப முறை, தேர்வுமுறை, சம்பளம் உள்ளிட்ட விவரங்களை கனரா வங்கியின் இணையதளத்தில் விளக்கமாக அறிந்துகொள்ளலாம்.
Comments
Post a Comment